இரா. குமார், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் கீழப்புளியங்குடியில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ரெ. இராமசாமிப் பிள்ளை. தாய் பராசக்தி.
தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்றவர் இரா.குமார். தினமலர், தினகரன் நாளிதழ்களின் செய்திப் பிரிவில் உயர் பொறுப்புகளை வகித்தவர். பத்திரிகை துறையில் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
சிறந்த தமிழறிஞரான இவர், எளிய இனிய நடையில் எழுதுவதிலும் மேடைகளில் சுவைபட உரையாற்றுவதிலும் வல்லவர். சிறந்த கவிஞர்.
இது வரை 15 நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள 'நடைமுறை இதழியல்' நூல் பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இதழியல் மாணவர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. பெரிய புராணம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியவற்றை புதுக்கவிதை நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திம் சிறந்த எழுத்தாளர் விருது, தருமையாதீனம் குருமகாசன்னிதானம் அவர்களால், 'இறைத்தமிழ் வேந்தர்' பட்டம், புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் 'ஆன்மீகச் சுடர்' பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.