கடந்த ஐந்து வருடங்களாக சமூகக் கதைகளும், காதல் கதைகளுமே எழுதி வந்த என்னை... முதன் முறையாக ஆன்மீக சம்மந்தமான நூலைப் படைக்க வைத்த என் தந்தை சதுரகிரி ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமிக்கு... என் இதயம் கனிந்த நன்றிகள்!
என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமே இந்த நூல் உருவாக முக்கிய காரணமாகும்.
முதன் முதலில்... பத்து வருடங்களுக்கு முன்பு... ஒரு கதையில் சிவன் மலையைப் பற்றியும், அதில் சுந்தரமகாலிங்கமாய் உயர்ந்து நிற்கும் சிவனைப் பற்றியும் படித்ததும்... என்னுள் ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு!
அந்த ஆதி அந்தமில்லாத சிவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலும், வேட்கையும் என்னுள் முதல் வித்தாய் முகிழ்த்தது அன்று தான்!
பிறகு... என் தேக நலம் சீர் கெட... எனக்கு சிகிச்சை அளித்த திரு. கார்த்திகேயன் சாரின் லேப்டாப்பில் சதுரகிரி பற்றிய புகைப்படங்களைக் கண்டபோது, மீண்டும் என்னுள் ஏதோ ஒரு இனம் புரியாத தவிப்பு!
உடனே அந்த சிவன் மலைக்கு சென்று வரவேண்டும் என்ற பரிதவிப்பை உடல்நிலை அடக்குகிறது.
என் உணர்வுகளை எல்லாம் ஒரு தோழியிடம் பகிர்வது போல் அவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒன்றரை வருடங்கள் மெதுவாய் கடக்க... 2009 மே மாதம் ஒன்றாம் தேதி விடியலில் சதுரகிரி மலையின் மேல் என் பயணம் இனிதாய்த் தொடர ஆரம்பிக்கிறது.
பால்ய காலத்திலிருந்தே... நான் பரவசத்துடன் மூழ்கித் திளைத்துக் கரையேறி இரு கைகளில் முகர்ந்து எடுத்த பக்தியின் ஈரம்... இன்று வரை வற்றாமல் என் விரல்களிலும் ஆழ்மனதிலும் சிலீரென்று ஒட்டியிருப்பதை எனக்கு உணர வைத்த ஒரு பயணம் அது!
சதுரகிரிக்கு சென்ற பிறகு... அபிஷேகம், தியானம், பிரார்த்தனை - வழிபாடு என்று பொழுது செல்ல...
அங்கு கிடைத்த அற்புத அனுபவங்கள், மெய் சிலிர்க்க வைத்தவை!
மலையேறிச் செல்லும் வழியிலேயே ஒரு பைரவர் எங்களுக்கு துணையாக உடன் வந்து மூன்று நாட்களும் எங்களுடனே இருந்தது...!
அந்திப் பொழுது தியானத்தில்... பல்லிகளின் கூட்டமான கவுளி சத்தம்... அங்கிருந்த பைரவர்களின் மாய உறக்கம்!
அபிஷேகத் தருணத்தில் சித்தர்களின் ஸ்வரூபங்கள் நிறம் மாறிய அதிசயம்!
சன்னதியில்... என் ஊன்று கோல் காணாமல் போய் மீண்டும் கிடைத்த மந்திரத் தருணம்!
இரவு... தியானத்தில் தெரிந்த சித்தரின் உருவம்!
நள்ளிரவு... சந்தன வாசனை... பூஜை சப்தம்... பேரானந்த நிலை, பரிபூரண சரணாகதி!
சித்தர்களின் திகட்டாத புன்னகை!
சித்தர் தரிசனம்!
ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமியின் ஆசீர்வாதம்!
அங்கிருந்து விடை பெறுகையில்... என்னுள் சர்வமாய் நிறைந்து அருள் புரிந்த ஸ்ரீ சுந்தரமகாலிங்க சுவாமியின் அருள்!
எல்லை காண இயலாத வரையறைக்கு உட்படாத மகாஸ்வரூபம்... சிவம்!
அவருடைய அடியையும் முடியையும் காண வராகமாய் விஷ்ணுவும், அன்னப்பட்சியாய் பிரம்மாவும் அவதாரம் எடுத்துத் தோற்றாலும்... சாதாரண பக்தனுக்கு...
ஆத்மார்த்தமான பக்தியுடன் நேசித்து, தன்னை உணர வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டி விரும்பி பக்தி செலுத்தும் தொண்டருக்கு... தன்னை உணர்த்துகிறார் அந்த ருத்ரன்!
"அன்பெனும் பிடியில் அகப்படும் மாமலையே...!" என்று அடியார்கள் பாடியது, இதைத் தானோ என, இன்று தோன்றுகிறது எனக்கு!
ஈசன்... பல நேரங்களில், பக்தர்களுக்கு ஒவ்வொரு விதமாக உருக்கொண்டு காட்சியளிப்பாராம்!
திருவண்ணாமலையில்... தன் அடியும் முடியுமாய்...!
சிவனடியார்களுக்கு... உயர்ந்த சற்குருவாய்!
ருத்ரபூமியான இடுகாட்டில்... சுடலைமாட சாமியாய்!
கைலாயத்தில்... ஆதி சிவமாய்... பரப்பிரம்மமாய்!
சிதம்பரத்தில்... தில்லை நடராஜராய்!
பல நேரங்களில்... சாத்வீகமான ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய்!
சில நேரங்களில்... ரௌத்ரம் கலந்த ருத்ரதாண்டவ மூர்த்தியாய்!
பல அவதாரங்களாய் அருள் பாலிக்கும் எம்பெருமான் திகம்பரநாதன்...
அந்த அற்புத சித்தர் பூமியாம் சதுரகிரியில்...
அன்னையிலும் சிறந்த அன்னையாய்...
மன்னரிலும் சிறந்த மன்னனாய்...
குருவிலும் சிறந்த சற்குருவாய்...
தந்தையிலும் சிறந்த தந்தையாய்...
எனக்குக் காட்சியளித்தார்!
முதல் பயணத்திலேயே, என் உளம் கவர்ந்து... இமைப் பொழுதிலும் என் நெஞ்சில் நீங்காதவராய் அந்த ஈசன் நிறைந்தார் என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்!
தாயிற்சிறந்த தயாவான தத்துவனாய் எனக்கு அருள் பாலித்த அந்தத் தந்தையின் திருப்பாதங்களை... நெகிழ்வும் நிறைவுமாய் பணிந்து வணங்கி... இந்த நூலை எழுதி... அவருடைய திருவடிகளுக்கே சமர்ப்பணமும் செய்கிறேன்... நன்றி!
- உமா பாலகுமார்