முக்கியமான வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்குமுன் 'இதயம் பேசுகிறது' மணியன் பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து விட்டு வருவது வழக்கம். மெக்ஸிகோவிற்குப் பயண ஏற்பாடு செய்து கொண்டிருந்த சமயம், மணியன் தரிசனத்துக்காகப் போனார்."பூகோள உருண்டையை எடுத்துப் பார். இந்தியாவுக்கு நேர் கீழே அந்த நாடு இருப்பது தெரியும்!'' என்றார் சுவாமிகள். மணியனுக்கு அது வியப்பாகவே இருந்தது.
"நாம் பாதாள லோகம் என்று குறிப்பிடுகிறோமே? அப்படி வைத்துக்கொள். பாதாளலோகத்தில் நாகலோகம் உண்டு; நாகர் வழிபாடு உண்டு; நரபலி உண்டு. நம்மை விடப் பழைமையான நாகரிக ஆட்சிமுறை எல்லாமே உண்டு -'' என்று நிறுத்தினார் சுவாமிகள்.மணியன் பெரும் வியப்பில் ஆழ்ந்து போனார். தான் கேள்விப்பட்டிராத அந்த நாட்டைப் பற்றி, அத்தனை நுட்பமான விஷயங்களை அவர் எடுத்துச் சொன்னது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
"நமக்கு உலோகங்களைப் பற்றிய நாகரிகம் தெரிவதற்கு முன்னால் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே ரொம்ப நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாகர் வழிபாடு - நாகர் பூஜை - எல்லாமே உண்டு. நிறைய ஆராய்ச்சிகளைக் கூடப் பண்ணி இருக்கிறார்கள்'' என்றார் சுவாமிகள். வியப்பில் ஆழ்ந்து நின்ற மணியனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
சுவாமிகள் குறிப்பிட்டபடி மெக்ஸிகோ நமது தேசத்துக்கு நேர் கீழேதான் இருக்கிறது. அங்கே மாயன் அழிவுகளில் நாகர் வழிபாடு மிகச்சிறப்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது.
மெக்ஸிகோ பயணக்கதையில் மணியன் இதைக் குறிப்பிட்டு விவரிக்கிறார்.
இதைப் போல, பல சுவாராஸ்யமான சம்பவங்களை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். இதைப் படிக்க படிக்க ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள் புரியும்