தற்போது உள்ள நாட்டின் எல்லைகளும், ஆளும் வரைமுறைகளும் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நம் பாரத தேசத்தில் நடந்த பழம்பெரும் நிகழ்ச்சிகளையும், ஆய்வுகளையும், அறிவுப் பொக்கிஷங்களையும் நாம் எழுத்து மூலம் தக்க வைக்காது, செவி வழி மட்டுமே பரவவிட்டு தக்க வைத்திருக்கிறோம். அதனால் ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு இடத்திலும், வேறுபல காலத்திலும் விதவிதமான விளக்க வடிவங்களும் இருந்திருக்கின்றன. செவி வழி செல்வது நெறியுடன் வாழ்வோர் மூலம் பரவுவதால் அடிப்படை விவரங்கள் மாறாது என்ற ஆழ்ந்த நம்பிக்கையும், அன்று எழுத்து வடிவங்கள் உருவாகாத நிலை என்பதாலும், செவி வழியே விவரங்களை மற்றவர்க்கு அறிவித்தது நமது பாணியாக இருந்தது. இன்று நாம் ஆவணங்கள் மூலம் எழுத்து வடிவில் அனைத்தையும் அறிவித்தாலும், நெறியுடனான வாழ்வு தளர்ச்சி அடையும் போது எழுத்து மூலம் வருவதற்கு மட்டும் எவ்வளவு பெரியதாக உத்திரவாதம் கொடுத்துவிட முடியும்?
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற குறளை எடுத்துக்கொண்டோமானால், "அப்பொருளில் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பதுதான் இன்றைய பாடமாக இருக்கிறது. ஆனால் வாய்வழி-செவிவழியாக அனைத்தும் நமக்கு வந்த நேர்மை நிறைந்த அந்தக் காலத்திலேயே குறள் இருந்திருந்தால் "அப்பொருளே மெய்ப்பொருள் என்று காண்பது அறிவு" என்பதே பாடமாக இருந்திருக்கும் என்று சொல்லலாம்.மேலும் இப்போதுகூட புதிதாக மொழி ஒன்றைக் கற்கும்போது, கேட்பதும் பேசுவதும்தான் முதன்மை பெறுகிறது. எழுதுவது என்றுமே இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. அதனாலேயே படிக்கவோ எழுதவோ இயலாதவர்கள் பலரும் எந்த மொழியையும் பேசிப்பேசியே கற்க முடிகிறது என்பதும், அதேபோல எழுத்தறிவு மட்டும் உள்ள பலரும் பேச முடியாது தவிப்பதையும் நாம் பார்க்கிறோம் அல்லவா? அதனால் வாய்வழி-செவிவழி வருவது என்றுமே மகத்துவம் வாய்ந்ததுதான். அதனாலேயே நா நயம் என்பதுதான் நாணயமாக அன்று அறியப்பட்டதோ?
அவ்வாறு செவி வழி வந்து, பின்பு எழுத்துக்கள் மூலம் நம்மை அடைந்ததுதான் நமது புராணங்கள், மற்றும் இதிகாசங்கள் என்பதை நாம் அறிவோம். வேத-உபநிஷத்துகள் கூறும் உயர்ந்த தத்துவங்களை, பேச்சு வாக்கில் மக்களிடம் பரப்புவதற்காக, நடந்த நிகழ்ச்சிகளை தத்துவங்களோடு ஒப்பிட்டு, வாழும் வகையைக் காட்டுவதில் இதிகாசங்கள் மென்மையான, மற்றும் மேன்மையான வழிகாட்டிகளாக விளங்கின. இதிகாசங்கள் பாரதத்தில் நடந்த நிகழ்வுகளின் கோவையான நமது பண்டைய சரித்திரங்களாக இல்லாமல் வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? ஏனென்றால், எவ்வாறு வேத மந்திரங்களை ஒருவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு பதிவு செய்துகொண்டார்களோ, அதேபோல நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் பயன்படும் முறையில் நீதி, நேர்மைக்கான கோட்பாடுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கின்றனர்.
இதிகாசங்கள் நமது சரித்திரங்கள் அல்லது சரித்திரக் கதைகள் என்று எவ்வாறு எடுத்துக்கொண்டாலும், அவைகளில் கூறப்பட்டிருப்பவைகள் பலவும் அக்காலத்திற்கு மட்டுமின்றி தற்போதைய நடைமுறை வாழ்விற்கும் பயனுள்ளதாக அமைகின்றன என்பது அறிவார்ந்து படிப்பவர்களுக்கு நன்கு புரியும். தான் எழுதுவது மட்டும் அல்லாது, மற்றவர்கள் பார்வையையும் பலர் அறியவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதுதான் பல மொழியாக்கப் படைப்புகளும்.
எனது முந்தைய தமிழாக்கமான "ராமாயணப்" புத்தக வடிவின் பிரதி ஒன்றை சென்னை பல்கலைக் கழகத்தில் சம்ஸ்க்ருதப் பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றிருந்த முனைவர் வீழிநாதனிடம் தருவதற்காகச் சென்றிருந்தேன். அதைப் பெற்றுக்கொண்டவர், அவர் வழி நடத்தும் "ஆதி சங்கர அத்வைத ஆராய்ச்சி மையம்" வெளியிட்டுள்ள ஆங்கில நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து அருளினார். அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது தமிழில் காணவிருக்கும் "Divine Design in Srimad Ramayana" என்ற ஓர் ஆய்வு நூல். அதை எழுதியவர் காலம் சென்ற முனைவர் T.P. ராமச்சந்திரன். ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணியின் விளக்கங்களை நமது வலைத் தள வாசகர்கள் அறிய ஆவல் கொண்டிருப்பார்கள் என்ற எனது எதிர்பார்ப்பில் எழுதுகின்றேன்.
வால்மீகி மற்றும் கம்ப ராமாயணங்களின் இலக்கிய ஒப்பீடுகளின் மூலம், எவ்வாறு முன்னவர் இராமபிரான் மற்றும் சீதாப் பிராட்டியின் மனித குணங்களையும், பின்னவர் அவர்களது தெய்வீகப் பின்னணியையும் மனதில் முதன்மையாக இருத்தித் தங்களது காப்பியங்களைப் புனைந்துள்ளார்கள் என்பதை வாசகர்கள் இப்போது அறிந்திருக்கக் கூடும். எனது முந்தைய தமிழாக்கப் படைப்பு...