இது என் கதைகளின் முதல் தொகுதி. அப்பாவின் சிறுகதைத் தொகுதி ஒன்றுகூட இதுவரை வெளிவரவில்லையே என்கிற ஆதங்கத்துடன், என் குழந்தைகள் முனைந்து ஏற்பாடுகள் செய்ததன் விளைவு!
நாற்பது ஆண்டுகால அளவில் இருந்த, இன்னமும் இருக்கப் போகிறபல பத்திரிகைகளில் இவை பிரசுரமாயின. அவைகளுக்கு என்பால் இருந்த மரியாதையும், நம்பிக்கையும் கொஞ்ச நஞ்சமல்ல. அவைகளிடம் குறையாத நட்பும் விசுவாசமும் எனக்கு இன்னமும் உண்டு.
''உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எழுதுவது பத்திரிக்கைக்கு ஒரு கௌரவம். நல்ல கதாசிரியர்களை வளர்த்து கூடவே தாமும் வளர்வதில்தான் பத்திரிகை தர்மம், சிறப்பு எல்லாமே இருக்கின்றன.'' அமரர் கி.வா.ஜ அவர்கள் எப்போதோ சொன்னது. நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடம்கூட இதற்கு இணையாகாது, ஆரம்ப காலத்திலிருந்தே சாவி, தேவன், விக்கிரமன், சுதேசமித்திரன் ரங்காச்சாரி இவர்களும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து வந்திருக்கிறார்கள். இவர்களையும் இங்கு நான் குறிப்பிட வேண்டியது ரொம்ப அவசியம்.
மனித இயல்பு - அறிவுடைய அனைவருக்குமே தெரியும், விசித்திரமான ஓர் குணப்பாங்கு. யார், எப்போது யாரிடம், எப்படி, ஏன் நடந்து கொள்கிறார்கள்? சரியாகப் பதில் புரிந்து கொள்ள முடியாத இந்தக் கேள்வியில் தான் பல கதைகளின் மூலக்கருவே ஒளிந்து கொண்டிருக்கிறது. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றாற் போல அவரவர் ஒரு அர்த்தம் புரிந்து கொண்டு, எழுத்தாளர்கள் தம் கதைகளைப் படைக்கிறார்கள். அவ்வளவுதான்.
''மனுஷ மனசுகள் ஒவ்வொண்ணும் ஒரு டைப், அதுகளை வச்சு கதை எழுதறபோது கழைக்கூத்தாடி கம்பி மேல நடக்கற மாதிரி ஜாக்ரதையா இருக்கணும். அசந்தாப் போச்சு.'' என்று தி. ஜானகிராமன் சொல்வார். ஒரு நல்ல கதைக்கு என்ன அடையாளம் என்று ஒரு தடவை கேட்ட போது அவர் சொன்னார் - ''படிச்சு முடிச்சதும் ஒருத்தன் 'டிஸ்டர்ப்' ஆகணும். அதான் என்று. வாசகன் மன நிலையில் இனம் புரியாத ஆனால் ஆரோக்கியமான ஒரு சலனம் ஏற்படவேண்டும், கதையைப் படித்ததும். இதுதான் இதற்கு அர்த்தம். இத்தொகுதியில் உள்ளவற்றில் ஒன்றிரண்டு கதைகளாவது அந்த 'உரைகல் பரீட்சையில் தேறிவிடும் என்பது என் நம்பிக்கை. ஒரு வேளை படித்த பிறகு வாசகர்களில் சிலர் வேறு விதமாக 'டிஸ்டர்ப்' ஆகி என்னைத் திட்டினால், அப்போதும் எனக்குத் திருப்தியே!
இனி வந்தனோபச்சாரம் கூறவேண்டிய கட்டம்.
என் உளங்கனிந்த நன்றி.
- ரஸவாதி