நெம்புகோல்கள் எழுக!
நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு ஆகிய இரு தொகுப்புகளுக்குப் பிறகு மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான இத்தொகுப்பு வெளி வருகிறது.
தமிழ் எழுத்துலகில் வர்க்க சார்புடைய எழுத்துக்கள் பலரும் எழுதிக் கொண்டு வருகிறார்கள் என்றாலும் ஒடுக்கப்படும் தலித் சமூகத்தின் பிரதிபலிப்பாக இலங்கையில் மறைந்த தந்தை டானியல் தொடங்கி தமிழகத்தில் பூமணி, சிவகாமி, கே. ஏ. குணசேகரன், இரவிக்குமார், பாமா, இமையம், அபிமானி... என்று பலரும் எழுதி வருவதில் நம்மால் சந்தோசப்பட முடிகிறது.
இந்நூற்றாண்டின் போர்க்குரலாய் தலித்துக்கள் எழத் தொடங்கியுள்ளதை வரலாற்றில் மறைக்க முடியாத அம்சமாகிப் போய்விட்டது.
1981 பிப்ரவரியின் முதல் ஞாயிறில் விழுப்புரத்தில் துவங்கி, நான் இன்றளவும் அங்கம் வகித்து வரும் 'நெம்பு கோல்' என்னும் மக்கள் கலை இலக்கிய அமைப்பை இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன்.
வியாபார ரீதியாகவும் உயர்ந்த வர்க்கத்திற்கு சேவை செய்யக்கூடியதுமாக என் எழுத்து அலங்கரிக்கப்படவில்லை. உழைக்கும் வர்க்க நலன்களுக்காகவும் ஒடுக்கப் படும் வர்க்கத்தின் விடியலுக்காகவும் சேவை செய்யக் கூடியதாகத்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இன்னமும் எழுதுகின்றேன். அதைத்தான் எனக்கு 'நெம்புகோல்,' கற்றுத் தந்தது.
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு முகங்களையும் முகவரிகளையும் இழந்து சமூகத்தில் சமூக நீதிக்காகப் போராடும் எங்கள் சனங்களின் குமுறலையும் எண்ணங்களையும்தான் நான் தொடர்ந்து பறைமுழக்கம் செய்கின்றேன். எனது பறைச்சத்தம் அதிகார வர்க்கத்தின் காதுகளில் எட்டும் வரை எனது பறை ஓயாமல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
எனது இலக்கிய முயற்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பேராசிரியர் பா. கல்யாணி, பேராசிரியர் த. பழமலய் உட்பட 'நெம்பு கோல்' இயக்கத்தின் பல தோழர்களும் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், விவசாயிகள், கூலி உழைப்பாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சூரிய தீபன், இந்திரன், தி.க. சிவசங்கரன், வே. சபாநாயகம், அஸ்வகோஷ், ப. திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கருத்தாலும் கரத்தாலும் உதவி செய்திருக்கிறார்கள். அவற்றிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இத்தொகுப்பு வெளிவராது எனக்கருதிய சூழ்நிலையில், வந்தே ஆகவேண்டும் என முயற்சி எடுத்துக்கொண்ட தோழர்கள் அ. மார்க்ஸ், இரவிக்குமார், பழமலய் உட்பட இத்தொகுப்பிற்கு ஒத்துழைப்பும் உதவிகளும் செய்த அத்துணை பேருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
நெம்புகோலாய் உங்கள் முன் நிற்கிறது என் எழுத்துக்கள். உங்கள் விமர்சனங்களால் மேலும் நிமிர்த்துங்கள்; என்னையும் ஒடுக்கப்பட்ட இச்சமூகத்தையும்.
நீங்களும் இச்சமூகத்தின் நெம்புகோல்கள்; எழுக!
- விழி. பா. இதயவேந்தன்