தமிழன் எக்ஸ்பிரஸில் நான் எழுதிய இரண்டாவது தொடர் இது!
முதல் தொடர் 'தொடத் தொட தங்கம்.' நல்ல வெற்றி பெற்று விஜய் டிவியில் 'மாயவேட்டை'எனும் பெயரில் ஒரு மெகா தொடராகவும் ஜொலித்தது.அதைத் தொடர்ந்து நான் எழுதிய தொடர்தான் 'சுற்றிச் சுற்றி வருவேன்'
பொதுவில் நான் தொடர்களைப் பொருத்தமட்டிலோ நாவல்களிலோ ஒரே விதமான விஷயங்களைச் சுற்றி வருபவனல்ல.
தொடருக்குத் தொடர் கதைக் களத்தை மாற்றிக் கொண்டே போவேன். சரித்திரம், சமூகம், குடும்பம், மர்மம் என்று வேறுவேறு தலங்களில் நான் பயணப்பட்டாலும் மர்மக் கதைகளில் எனது பயணத்தை வாசகர்கள் பெரிதும் வரவேற்பதை உணர்கிறேன்.
அந்த வகையில் இந்த தொடரையும் மர்மம் எனும் தலத்தில் அமைத்து அதனுடன் கொஞ்சம் போல மாந்திரீகத்தையும் சேர்த்து இதை எழுதினேன்.ரசாயணம், பெளதிகம் போல மாந்திரிகமும் ஒரு பாடம். அதை கற்றுக்கொள்ள முயன்ற ஒருவரின் கதை இது அவரது சந்ததிகள் அதனால் படும் பாட்டையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் இதில் சொல்லியிருந்தேன்.
வழக்கம்போல் வரவேற்புக்கு பஞ்சமில்லை. வார இதழில் எந்த ஒரு விஷயத்தின் வெளிப்பாடும் பளிச்சென்று தூக்கலாக இருக்கும். எனவே தொடர் அற்புதமாக வெளிப்பட்டது. வாசக உலகமும் விரும்பி வரவேற்றது.
கொஞ்சம் போல மண்வாசனையையும் இதில் சேர்த்துக் கொண்டேன். எல்லாமே நல்லவிதத்தில் அமைந்து பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.மனித வாழ்வில் எவ்வளவோ மர்மங்கள் உண்டென்றும் இல்லையென்றும் விவாதங்கள்... அது ஒரு தொடர்கதை. முற்றிலும் முடிவான விடையை யாரும் சொன்னதில்லை. சித்தர்களின் கூற்றுப்படி கண்டவர் விண்டிலராய், விண்டவர் கண்டிலராகவே அவை தொடர்ந்து கொண்டிருக்கிறது.நம்பிக்கைதான் இதில் பிரதானம்.
இப்படியெல்லாம் நடக்குமா? அது சாத்யமா? என்று கேட்காமல் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்து இதை எழுதினேன்.ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் எந்த அணியில் பேசுகிறாரோ அதற்கு வலுசேர்ப்பதற்காக ஆதாரங்களை அடுக்குவார். இறுதியில் நடுவர்தான் தீர்ப்பு வழங்குவார். இந்த கதையைப் பொருத்தமட்டில் வாசகர்கள்தான் நடுவர்கள்.
அவர்கள் ஒப்புக்கொள்ளலாம், விலக்கியும் வைக்கலாம். இந்த தொடரைப் பொறுத்து என் பணி விறுவிறுப்பாகக் கதையை எழுதியதுதான்...இந்த கதைக்கு நேர் எதிரான கருத்து கொண்ட சிந்தனைகளை உடைய படைப்பையும் நான் எழுதியிருக்கிறேன்.
எனது வளர்ச்சியின் அடிநாதமாக திகழும் அன்னை மீனாட்சியின் பெருங்கருணைக்கும் பேரருளுக்கும் நான் என்றும் உரியவன்.
அவளது செழுங்கருணையால் எனது பயணம் தொடரும்.
பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்