சென்னையின் வட்டார ஏடுகளில் மிகப் பிரபலமான 'அண்ணாநகர் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் திரு. கே.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் என்னை வாரம் வாரம் அப்பத்திரிகையில் தமிழில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதப் பணித்த காரணத்தினால், 'அண்ணா நகர் டைம்ஸ்' மற்றும் அதன் சகோதர இதழ்களான 'மாம்பலம் டைம்ஸ்,' 'அசோக்நகர் - கே.கே. நகர் டைம்ஸ்,' 'கீழ்ப்பாக்கம் - புரசை டைம்ஸ்'களில் என்னுடைய படைப்புகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் அச்சிட்டு வாரம் வாரம் விநியோகிக்கப்படும் இவ்விதழ்களில் இதுவரை வெளிவந்த முப்பத்தி ஆறு கட்டுரைகளின் தொகுப்பே உங்கள் கரங்களில் இப்போது தவழ்கிறது.
ஒவ்வொரு வார இறுதியிலும் ஆவலோடு எதிர் பார்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகர்களால் படிக்கப்படும் இப்பத்திரிகைகளில் எழுதுவதை நான் மிகப் பெரும் பாக்கியமாகக் கருதி, அதற்கு வாய்ப்பளித்த உன்னத ரசிகரும், நிர்வாகத் திறமையில் ஜொலிக்கும் பண்பாளருமான திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓயாத பணிகளுக்கிடையே என்னுடைய நிர்ப்பந்தங்களால் சிறிதும் சலிப்படையாமல் ஒவ்வொரு வாரமும் உயிரோட்டமுள்ள, அற்புதமான கேலிச் சித்திரங்களைத் தன் மந்திரத் தூரிகையால் வரைந்து, வாசகர்களின் கவனத்தைக் கட்டுரை மீது ஒரு பளிச்சிடும் நியான் விளக்கு போலச் சுண்டி இழுக்கச் செய்து வரும் திரு. 'நடனம்' அவர்களுக்கு என் நன்றிகள்.
'சிரிப்பே மருந்து' என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் தான் எழுப்பும் சிரிப்பலைகளால் உடல் மற்றும் மன உபாதைகளை வெற்றிகரமாக விரட்டியடிக்கும் 'நகைச்சுவை வைத்திய ரத்தினம்' திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள், நகைச்சுவை எழுத்தாளர்களைப் பாராட்டி கெளரவிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர். தன் எழுத்தால் மட்டுமன்றி நகைச்சுவை ததும்பும் பேச்சாலும் கேட்பவர்களை விலாப்புடைக்கச் சிரிக்க வைத்துவிடும் அவர் இத்தொகுப்பிற்கு மனமுவந்து எழுதித் தந்த முன்னுரைக்கு என் நன்றிகள்.
கட்டுரைகளை 'வரிகள்' விடாமல் படித்த கையோடு என்னுடன் தவறாமல் தொலைபேசி மூலமாகவோ அல்லது சந்திக்கும்போது நேர்முகமாகவோ என் எழுத்தை நெஞ்சாரப் பாராட்டி ஒரு அன்யோன்யத்துடன் ஆதரித்து வரும் வாசக நண்பர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
தமாஷா 'வரிகள்' படிப்பவர்களின் மனச்சுமைகளை ஓரளவாவது இறக்கி - அதை லேசாக்க உதவுகின்றன என்று வாசகர்கள் கருதினால் அதற்கு என்னை ஊக்குவிக்கும் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும், எழுதப் பயிற்சியை அளித்த என் மானசீக ஆசான்களான பி.ஜி. உட்ஹவுஸ், தேவன், கல்கி மற்றும் தி. ஜானகிராமன் அவர்களும், தொடர்ந்து எழுத அருள் புரியும் எல்லாம் வல்ல இறைவனுமே காரணம் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.
- ஜே.எஸ். ராகவன்.