பேராசிரியர் கல்கியின் எழுத்துக்கள் எல்லாமே காலங்கடந்து நிற்கும் பெருமையுடையவை என்பதற்கு இந்தத் 'தாகூர் தரிசனம்' கட்டுரைத் தொகுப்பும் மிகச் சரியான உதாரணமாய் அமையும்.
'என் ஆலயப் பிரவேசம்,' 'யாத்திரைக் கதம்பம்' இரண்டு கட்டுரைகளிலுமே ஆசிரியர் நம்மைக் குற்றாலச் சாரலுக்கு அழைத்துப்போய், அருவிகள், ஆலயங்கள் எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறார்.
'சரஸ்வதி மஹால்' என்ற நூலகம் ஒன்று தஞ்சாவூரில் இருப்பதைப் பலர் அறிந்திருக்கலாம். ஆனால் பேராசிரியர் கல்கியின் 'சரபோஜியின் கலைக்கோவில்' கட்டுரையைப் படித்து முடிக்கிறபோது, அது என்னமோ புகழிலும் பெருமையிலும் தஞ்சைப் பெரிய கோவிலைப் போலவே இதுவும் உயர்வானதாகத் தோன்றுகிறது!
ராஜாஜியோடு அமர்ந்து சுதேசி வெய்யிலை அனுபவித்த செய்திகளை எல்லாம் சொல்லும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தைப் பற்றியும், கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையைப் பற்றியும் - என்று வித்தியாசமான பயண அனுபவங்களை நமக்கு வழங்குகிறார் கல்கி.
உதகைப் பயணம் பற்றிய கட்டுரை 'கட்டு மூட்டை' ஒவ்வொரு கட்டுரையிலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் பகுதிகள் நிறையவே உண்டு என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? 'கல்கி' என்றால் இனிமேல் அகராதிகளில் 'சிரிப்பு' என்றுகூடப் பொருள் விளக்கம் தரலாம். சிரிப்பு என்றால் அநாகரிகமான, தரக்குறைவான நகைச்சுவை இல்லை; மிகவும் உயர்தரமான நாகரிகமான நகைச்சுவையைக் கையாண்டவர் பேராசிரியர் கல்கி.
நூலின் மகுடமாகத் 'தாகூர் தரிசனம்' கட்டுரை அமைந்துள்ளது. சாந்தி நிகேதனச் சூழலுக்கு வாசகர்களை அப்படியே அழைத்துச்சென்று விடுகிற ஆற்றல், இந்தக் கட்டுரைக்கு உண்டு.