நவராத்திரி, கடற்கரை, பஜனை மடம் போன்றவற்றுடன் பரவசத்துடன் இணைத்துப் பேசப்பட்டு, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு ஆர்வத்துடன் கொரிக்கப்படும் சுண்டல்களிலும் நகைச்சுவையைப் போன்று பலவகைகள் உண்டு. பட்டாணி, கடலைப் பருப்பு, கொத்துக்கடலை, வேர்க்கடலை, பாப்கார்ன் போன்ற பல திருநாமங்களுடன் கச்சிதமாக முடையப்பட்ட தொன்னைகளில் வழங்கப்படும் சுண்டல்களும், நகைச்சுவையைப் போன்று சுண்டிய முகங்களை செந்தாமரையாக மலரவைக்கும் திறனுடையது. சுண்டல், கிண்டல் இரண்டும் ஒலி ஓசையில் ஒத்திருக்கும் உடன்பிறவா சகோதர வார்த்தைகள்.
வெந்தால்தான், கடலைகளோ, பருப்புகளோ சுண்டலாக முடியும். தான் வெந்து, உண்பவரை வேக வைக்காது மகிழவைக்கும் சுண்டல், கொறிக்கும் வகை சிற்றுண்டிகளில் பேராண்டி, எவ்வாறு, கடற்கரையும் காதலும், வெண்ணிலாவும் வானும் போல இணைந்து இருக்கின்றனவோ, அவ்வாறே காதலும் சுண்டலும் பிணைந்து இருக்கின்றன என்று சொன்னால், சில காதலர்கள் சண்டைக்கு வருவார்கள். காரணம், நறநற மணலை அரிந்துகொண்டே கடலை போடும்போது, தேங்காய், மாங்காய் பிணைந்த பட்டாணி சுண்டலை விற்கும் சிறுவர்கள், செவ்வனே ஆரம்பித்து, ருசிகரமாக நடந்துகொண்டிருக்கும் சிவபூஜையில் கரடியாக மூக்கை நுழைப்பதால்தான். இருப்பினும், காதல் கனிந்து கல்யாணத்தில் முடிய, காதலர்கள் சுண்டல் உண்ண வேண்டும் என்று பட்டினப்பாக்க கிளிஞ்சல் சித்தர், சுண்டலுடன் நகைச்சுவையையும் பரிமாற்றக்கொள்ள வேண்டும் என்று செப்பி அருளியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோவில்களில் பக்தர்களுக்கும், கடற்கரைகளில் காதலர்களுக்கும் கிடைக்கும் சுவையான சுண்டலின் பெயரைத் தாங்கியிருக்கும் இந்தப் புத்தகத் தொன்னையில் வழங்கப்படும் கட்டுரைகள், 'தமாஷா வரிகள்' என்கிற தலைப்பில் ஒன்றாக வெளிவந்தவை. கொறிக்கவும், கொறித்துக் கொண்டே சிரிக்கவும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
இந்த விநியோகத்தை ஸ்பான்ஸர் செய்த வட்டார ஏடுகளின் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஓவியர் நடனம் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த கையோடு, விரைவில் ஜீரணம் ஆகிவிடும் (அல்லது பல நாட்கள் ஆகிவிடாத) ஒரு மாலைப்பொழுதின் சிற்றுண்டிக்காகவே பெரிய தொகையை, தற்காலத்தில் பள பள 'பவன்'களில் செலவழிக்க அஞ்சாத நெஞ்சங்கள், இப்புத்தகத்தை வாங்க சிறுதொகையை ஒதுக்கி, பரிவுடன் வழங்கப்படும் சுண்டல் சுவைத்து இன்புற வேண்டுகிறேன்.
அன்புடன்,>br/>ஜே.எஸ்.ராகவன்