எனது பெயர் ரஞ்சனி நாராயணன். திருமணத்திற்கு முன் ஒரு ஸ்டெனோ-டைப்பிஸ்ட். திருமணம் ஆன பின் முழு நேர இல்லத்தரசி. பல வருடங்கள் கழித்து ஆங்கிலம் பேசச்சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதையும் ஏற்று செம்மையாக செய்தேன். திறந்தவெளிப் பல்கலைகழகத்தில் படித்த சமூகவியல் முதுகலைப் பட்டதாரி நான்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்து திருமணம் ஆகி, இப்போது இருப்பது பெங்களூரில். முதலில் இல்லத்தரசி என்று சொல்லிக் கொள்வதை விரும்பினாலும் எழுத்தாளர் என்ற அடையாளம் என்னை ரொம்பவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது. பல வருடங்களாக பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதி வந்தாலும் இணையத்தில் சில ஆண்டுகளாகத்தான் தீவிரமாக இயங்க ஆரம்பித்திருக்கிறேன். இணையத்தில் எனக்கென ஒரு இடம் பிடித்திருப்பது சந்தோஷமான விஷயம். இணையத்தில் என் எழுத்துக்களைப் படித்துவிட்டு தங்கள் தளத்தில் எழுதும்படி சில இணைய இதழ்கள் கேட்டுக்கொண்டதும் நான் எழுத்தினை தீவிரமாகத் தொடரக் காரணம்.
புத்தகங்கள் வாசிப்பது எனது அம்மாவிடமிருந்து நான் (நாங்கள்) கற்றது. 89 வயதிலும் அம்மா இன்னமும் புத்தகமும் கையுமாகத்தான் இருக்கிறாள். நாங்கள் பள்ளிப்புத்தகமும் கையுமாக இருந்த காலத்தில் அம்மாவும் எங்களுடன் புத்தகமும் கையுமாக அமர்ந்திருப்பாள். படிப்பதுடன் கோர்வையாக எழுதுவதும் அம்மாவிற்கு கைவந்த கலை. எனது எழுத்து, வாசிப்பு இரண்டிற்கும் நான் என் அம்மாவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும். இந்தக் காரணங்களாலேயே எனது முதல் புத்தகத்தை (விவேகானந்தர்) என் அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன்.
'சுவாமி விவேகானந்தர்' என்ற இந்தப் புத்தகம் எளிமையான முறையில் தமிழ் வாசகர்களுக்கு சுவாமிஜியை அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன். ஒரு மகானைப் பற்றிய புத்தகத்துடன் எனது அச்சுப்புத்தகப் பயணம் தொடங்கி இருப்பதில் மன நிறைவு கொள்ளுகிறேன்.
டிஜிட்டல் வடிவிலும் இந்தப் புத்தகத்தைப் படித்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து உங்கள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்
என் எழுத்தைப் படித்துப் பாராட்டும் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றி.