சென்னை போன்ற நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராமப்புறங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதையும் தாண்டி, கிராமப்புறங்களுக்கே சொந்தமான உணவுப் பண்டங்களை சாப்பிட்டு பார்க்கும் வாய்ப்பு இன்னும் அரிது. நகரங்களில் வாழும் பலரும் கிராமப்புறங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றாலும்கூட தங்களின் சொந்த ஊரோடு தொடர்பு இல்லாமலேயே வாழும் தலைமுறைகள் உருவாகிவிட்டன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பொங்கல் திருநாள்கூட குக்கர் பொங்கலால் கொண்டாடப்படுகிறது. நகரில் தொடங்கிய Fast Food எனப்படும் துரித உணவு கலாச்சாரம் சிறு நகரங்களையும் தொற்றிக்கொண்ட இந்த தருணத்தில் கிராமப்புற உணவுகளுக்கான ஏக்கம் நம்மில் பலருக்கும் கண்டிப்பாக இருக்கும். இந்த குறையைப் போக்கும் நோக்கத்தில் உருவானதுதான் கிராமத்து விருந்து.நமது தமிழக கிராமங்களுக்கே சொந்தமான மண் வாசனையுடன் கூடிய உணவுப் பண்டங்களை சமைப்பது பற்றி சொல்ல சரியான ஆள் யாரென்று யோசித்தபோது, இன்று திரையுலகில் கணீர் குரல் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நாட்டுப்புற நாயகி பரவை முனியம்மா சரியான தேர்வாகத் தோன்றியது. நான் இயக்கி, சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியில் 'கிராமத்து விருந்து' என்கிற பெயரில் பரவை முனியம்மா சமைத்துக் காட்டிய வித்தியாசமான கிராமத்து உணவுப் பண்டங்களின் சமையல் செய்முறைகளை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். படித்துப் பாருங்கள். சமைத்துப் பாருங்கள். மண் வாசனையுடன் சுவைத்துப் பாருங்கள்.
- English
- 中文(简体)
- 中文(繁體)
- Bahasa Melayu
- தமிழ்