"இந்தியா என் தாய் நாடு: இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்" என்று தினமும் மாணவர்கள் பள்ளிக் கூடங்களில் உறுதிமொழி எடுப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பலரும் அந்த உறுதிமொழியை மறந்து விடுவார்கள். ஆனால் பள்ளி வாழ்க்கையிலேயே ஒருவர் நாட்டுப்பற்றை வளர்த்துக் கொண்டார். எல்லோரையும் உறவினர்களாகவே கருதினார். அப்பா, அம்மா, ஆசிரியர் மூவரையும் மதித்து வணங்கினார். இறைவனின் கருணையை எப்போதும் மனத்தில் எண்ணி வழிபட்டார். அவர்தான் 'அப்துல் கலாம்', 'ராக்கெட் மனிதர்' என்று பெருமையோடு அழைக்கப்படுகிறார்.
எளிமையானவர்; அடக்கத்தை அணிகலனாகக் கொண்டவர். விண்வெளி ஏவுகணைகளைக் கண்டுபிடிப்பதில் சாதனை படைத்து விண்ணைத் தொட்டவர். அதேபோல் தமிழ் இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவர். தாய்மொழியின் சிறப்பை உணர்ந்தவர். கவிதைகள் எழுதுவார், வீணை வாசிப்பார். பல்துறை வித்தகர் அப்துல் கலாம்.
அப்துல் கலாம் அவர்கள் இன்று நம் நாட்டுக் குடியரசுத் தலைவர். அதுவும் குழந்தைகள் போற்றும் குடியரசுத் தலைவர்.
'குழந்தைகள் கொண்டாடும் குடியரசுத் தலைவர்' நூலில் கலாம் அவர்களின் குணநலன்களைப் படிப்பதன் மூலம் நம் இந்திய நாட்டுக் குழந்தைகள் இணையிலாச் சிறப்புகள் எல்லாம் பெறுவர். வளமான இந்தியா அவர்களால் உருவாகும்.